2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது செம்மொழி மாநாடு

2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது செம்மொழி மாநாடு

2 mins read
6578d184-eab3-41bd-abd2-5b00185c476e
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - படம்: இணையம்

சென்னை: இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் ஐந்து நாட்கள் மாபெரும் அளவில் மாநாடு நடத்தப்படும் என்று மார்ச் 16ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி, தொன்மை, தனித்தன்மை,பொதுமைப் பண்பு, பண்பாடு, உயர்ந்த சிந்தனை, இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழி.

தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று திரு ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி அறிவிக்கப்பட்ட பின்னர், முதலாவது செம்மொழி மாநாடு 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் அன்றைய தமிழக முதல்வர், மு.கருணாநிதி தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது.

“திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளது.

“அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை, பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்த்து வருகிறது. செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24ஐ நடத்தியது.

“பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்தது. அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருகிறது.

“மேலும், அயலகத் தமிழர் மாநாடு, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை, திருக்கோயில்களில் தமிழ் வழிபாடு,” என்று தமிழக அரசின் தமிழ் சார்ந்த செயல்பாடுகளைக் குறிப்பிட்டார்.

அந்த வகையில் இரண்டாவது செம்மொழி மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட திட்டமிடப்படுகிறது என்று திரு ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த 2023ஆம் ஆண்டு திரு மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் வந்திருந்தபோது தமிழ் முரசுக்கு அளித்த பேட்டியில், இரண்டாவது செம்மொழி மாநாட்டை நடத்தத் திட்டமுண்டு என்றும் அதற்கான சூழல் அமையும்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்