தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை: திமுக வாக்குறுதி

2 mins read
b00e492c-0b49-4891-bfbc-86b81b2caa1d
64 பக்க திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

64 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை ஸ்டாலின் வாசித்தார்.

“மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறுகின்ற வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

“மாநில முதலமைச்சர்களின் ஆலோசனையைப் பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.

“ஒன்றிய அரசுப் பணிகளுக்குத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும். அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

“திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ரயில்வே துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். நாடாளுமன்ற - சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

“நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

“ஒன்றிய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும். உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்,” போன்ற வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.

குறிப்புச் சொற்கள்