தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுக வாரிசு அரசியலில் உள்ளே வெளியே

2 mins read
cef38938-f8ed-47f1-a9ce-418c3c6a47c4
திமுக அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு (நடுவில்). - படம்: தமிழக ஊடகம்

தமிழகத் தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளில் காணப்படாத வாரிசு அரசியல் இந்த மக்களவைத் தேர்தலிலும் நீடிக்கிறது. திமுக அறிவித்த 21 வேட்பாளர்களில் கிட்டத்தட்ட மூவரில் ஒருவர், அதாவது 8 பேர் திமுக தலைவர்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் சகோதரி கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் களம் இறக்கப்பட்டு உள்ளார். ஸ்டாலினின் மற்றொரு உறவினரான தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக முதுபெரும் தலைவர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி வடசென்னையிலும் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான காலஞ்சென்ற வே. தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னையிலும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் வேலூரில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த வாரிசு அரசியலில் இம்முறை ஒருவருக்குப் புதிதாக சேர்க்கப்பட்டும் மற்றவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2019 தேர்தலில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம சிகாமணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், மற்றொரு மூத்த தலைவரும் அமைச்சருமான கேஎன் நேருவின் மகன் அருண் நேருவுக்குப் புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

தென்காசி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா பி.துரைராஜ் 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அதேபோல தருமபுரி வேட்பாளர் ஆ. மணியின் தந்தை ஆரிமுத்துக் கவுண்டரும் அண்ணாதுரை காலத்து திமுக பிரமுகர் ஆவார்.

அண்மையில் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுகவின் வாரிசு அரசியலைச் சாடினார்.

“திமுக, காங்கிரஸார் ஆட்சி அதிகாரத்தால் தாங்கள் சம்பாதிக்க வேண்டும், தங்களது குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள்.

“அடுத்து யார் முதல்வராகப் போகிறார்கள், யார் எம்பி மற்றும் எம்எல்ஏவாகப் போகிறார்கள் என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடனே பதில் கிடைக்கும். அப்பாவுக்கு அப்புறம் பிள்ளை, அப்புறம் அவருடைய பிள்ளை என வாரிசு அரசியலை முன்னிறுத்துகிறார்கள்,” என்று மோடி பேசினார்.

திமுகவில் இம்முறை 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 21 வேட்பாளர்களில் மூவர் பெண்கள்.

குறிப்புச் சொற்கள்