சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று மதுரை, தர்மபுரி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய பத்து இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
சென்னையிலும் கடும் வெயில் நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் பகலில் வெயிலின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடும் வெயிலுக்கு இடையே பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை தூத்துக்குடியில் 4 செ.மீ மழையும், காயல்பட்டினத்தில் 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.
கன்னியாகுமரி உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்ததை அடுத்து பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

