தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோரிக்கைகள் நிறைவேறவில்லை: தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள்

1 mins read
f2443dff-12d2-4941-a96a-f51e316cc668
ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் கிடக்கிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகத்தில் ஏராளமான கிராமங்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்துள்ளன.

சில சிற்றூர்களில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்தே இப்புறக்கணிப்பு நடந்துள்ளது.

புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022ல் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் இன்றுவரை கைது செய்யப்படவில்லை என்பதே மக்களின் கோபத்துக்குக் காரணம்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட கிராமங்கள் தேர்தலைப் புறக்கணித்தன. ஏகனாபுரம் கிராமத்தில் 1,400 வாக்குகள் உள்ள நிலையில், யாரும் வாக்களிக்கவில்லை. கிராம மக்களுடன் மாவட்ட ஆட்சியர் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

திருவள்ளூர் மாவட்டம், குமாரராஜபேட்டையில் உள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இப்பகுதியில் 6 வழிச்சாலைக்கு விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் புறக்கணிப்பு நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சின்ன அயன்குள பகுதி மக்கள் கறுப்புக்கொடியை காட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி துளுவப்பெட்டா, குல்லாட்டி கிராம மக்கள் சாலை வசதிகளை ஏற்படுத்தக்கோரி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்