விருதுநகர்: கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

1 mins read
1bacff18-ef2d-4551-b474-255e90977370
விருதுநகர் மாவட்டத்தின் கரியாபட்டிக்கு அருகேயுள்ள கல்குவாரி ஒன்றில் வெடிபொருள்கள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். - படம்: ஊடகம்

கரியாபட்டி: விருதுநகர் மாவட்டத்தின் கரியாபட்டியை அடுத்த ஆவியூருக்கு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பாறைகளைப் பிளக்கப் பயன்படுத்தப்படும் வெடிகள் ஒரு வாகனத்தில் இருந்து இறக்கி ஒரு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகள் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறின.

அதிலிருந்து எழும்பிய தீப்பிழம்பு பல மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த சத்தம் சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அப்போது வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை முற்றிலும் தரைமட்டமாகிக் கிடந்தது. மேலும் அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் நான்கு பேரின் உடல்கள் சிதறிக்கிடந்தன.

இந்த வெடி விபத்தின்போது அருகே உள்ள பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கல்குவாரியை மூடும்படி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வெடிப்புச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்