சென்னை: மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும். பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 23,000 தொடக்கப் பள்ளிகளில் அறிவார்ந்த காட்சிப் பலகைகள் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 46 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வரும் கல்வியாண்டில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதத்துக்குள் 50 விழுக்காடு பணிகள் நிறைவடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது. 8,000 அரசுப்பள்ளிகளுக்கு அகண்ட அலைவரிசை இணையத்தள இணைப்புகள் வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி செலவில் அறிவார்ந்த வகுப்பறைகளை உருவாக்கும் பணியில் தமிழக கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.