தென்காசி: தமிழக வனப்பகுதிகளில் வறட்சி காணப்படுவதால் பல்வேறு விலங்குகள் தோட்டப்பகுதிகளுக்கு படை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வனப் பகுதியில் உணவு, குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுதான் இதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் மலையடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள் இவ்வாறு தோட்டப்புறங்களை நோக்கிச் செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அண்டை மாநிலமான கேரளாவின் எல்லையை ஒட்டியுள்ள தமிழக வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக அந்த யானைகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அருகே உள்ள தென்காசிக்கு அவ்வப்போது சென்று வருகின்றன.
தென்காசி தோட்டப் பகுதிகளில் வாழை, தென்னை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. எனவே உணவு தேடி வரும் யானைகளால் பயிர்களும் மரங்களும் சேதமடைகின்றன.
இந்நிலையில், யானைகள் அங்கு செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அவற்றை விரட்டி வருகின்றனர்.