சென்னை: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 50 விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு புதன்கிழமை வரை 1.81 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
இம்மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 3 .5 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்து தமிழ் திசையின் தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 140 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1.07 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இது விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 25% உயர்த்துவதை அரசு வழக்கமாக வைத்திருக்கிறது.
அவ்வாறு உயர்த்தப்பட்டாலும்கூட விண்ணப்பித்த மாணவர்களில் 40 விழுக்காட்டினருக்குக் கூட அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காது.
அரசு கலைக் கல்லூரிகளில் சேர கடந்த 2022-23 ஆம் ஆண்டில் 2.98 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2023-24 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.02 லட்சமாக அதிகரித்தது. நடப்பாண்டில் இது 3.50 லட்சத்தைக் கடக்கக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசின் சார்பில் இன்றுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

