சென்னை: தமிழகத்துக்குக் காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
எனினும் கர்நாடக அரசு இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் நீண்டகாலமாக பிரச்சினை நிலவி வருகிறது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 96வது கூட்டம் டெல்லியில் நடை பெற்றது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு இதுவரை 96.50 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் நடப்பாண்டு பிப்ரவரி முதல் மே 14ஆம் தேதி வரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டிய 6 டி.எம்.சி நீர் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதையடுத்து கர்நாடக அரசு முன்வைத்த வாதத்தில் அம்மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டது. பிப்ரவரி முதல் மே இரண்டாம் வாரம் வரை போதிய மழை பெய்யவில்லை என்றும் மாநில தலைநகர் பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அம்மாநில பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தற்போதையை சூழலில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் செவிமெடுத்த காவிரி ஒழுங்காற்றுத் தலைவர் வினித் குப்தா, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகா செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மே மாதத்தில் திறக்க வேண்டிய 2.5 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்றும் மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திறக்கப்பட வேண்டிய நீரையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

