சென்னை: தமிழகத்தில் கோடை கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் 1.77 லட்சம் யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.
ஏப்ரல் மாத வெயிலை சாதகமாகப் பயன்படுத்தி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுச் செயல்பட்டு சாதித்துள்ளது.
சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் பல்வேறு அரசு அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளி, மருத்துவமனைக் கட்டடங்கள் உட்பட மொத்தம் 662 கட்டடங்களில் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அதன் பலனாக தற்போது 1.77 லட்சம் யூனிட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை மாநகராட்சியின் மின்கட்டணம் ரூ.10 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“உலக அளவில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உள்ளது இந்தியா. அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் வரைதான் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாகும்.
“ஆனால் இந்த ஆண்டு கடும் வெயில் காரணமாக, அதிகபட்சமாக 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது,” என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

