கோவை: தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்திருப்பதாகவும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கடந்த 17 ஆம் தேதி மறைந்த முன்னாள் மேயர் தா. மலரவன் வீட்டிற்குத் திங்கட்கிழமை வந்த இபிஎஸ், மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் சிலந்தை ஆற்றில் கேரள அரசாங்கம் தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாயத் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்,” என்றார் பழனிச்சாமி.
மேலும், “கர்நாடக அரசும் மேக தாதுவில் தடுப்பணை கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது. இதேபோல், ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.
அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்தார்.
தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசாங்கத்திடம் இபிஎஸ் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்தார் என்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது எனத் திமுக ஆட்சியாளர்களை எடப்பாடி சாடினார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்குகளை திமுக அரசு திட்டமிட்டு நீக்கியதாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருந்ததாகவும் திரு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

