திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவிருக்கிறது என்று தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநாட்டையொட்டி மாபெரும் அரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த அரங்கில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ்பெற்ற முருகன் கோவில்கள் குறித்த கண்காட்சி அரங்கு, ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படும் ஆய்வரங்கம், ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும்.
இந்த மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2,000க்கு மேற்பட்ட பேராளர்களும் முருக பக்தர்களும் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டையொட்டி அமைச்சா் பி.கே. சேகா்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள், ஆன்மிகப் பெரியோா்களைக் கொண்ட 20 உறுப்பினா்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.