முல்லைப் பெரியாறு: கேரள நடவடிக்கைக்கு தமிழகம் பதிலடி; நிபுணர் குழுக்கூட்டம் ரத்து

முல்லைப் பெரியாறு: கேரள நடவடிக்கைக்கு தமிழகம் பதிலடி; நிபுணர் குழுக்கூட்டம் ரத்து

1 mins read
241c38e2-4a7e-4714-b9ad-4270da606bf7
முல்லைப் பெரியாறு அணை - படம்: ஊடகம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, கேரளா மேற்கொண்ட நடவடிக்கைக்கு தமிழக அரசு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சிடம் விரிவான ஆய்வறிக்கையை அளிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தது.

இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சின் நிபுணர் குழுக் கூட்டம் டெல்லியில் மே 28 அன்று (நேற்று) நடைபெற இருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதன் மூலம் தமிழக அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கேரள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் அமைந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, மே 28ஆம் தேதி நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், வருங்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற இருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் நிபுணர் குழுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திடீர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்