சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே வெப்பம் மீண்டும் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தலைநகர் சென்னையில் 108 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ள சூழலில், பள்ளிகளைத் திறப்பது என்பது சரியான முடிவாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
“மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேலும் இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறப்பை தமிழக அரசு ஒத்தி வைக்கவேண்டும்,” என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி அரசுப் பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும்.
கடந்தாண்டு தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போதும் கடும் வெப்பம் நிலவியதால் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்படி, பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 7ஆம் தேதிக்கும் அதன்பின்னர் ஜூன் 14ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நடப்பாண்டில் கடந்த ஆண்டைவிடவும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், அதுபோல் பள்ளிகளைத் திறந்தால் எந்தப் பெற்றோரும் தங்களது பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்கவேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும் தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

