கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடியின் வருகை காரணமாக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்குச் செல்ல பொதுமக்களுக்கு வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், கடும் சோதனைக்குப் பிறகே விவேகானந்தர் மண்டபத்துக்குச் செல்ல சுற்றுப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேவேளையில், கைப்பேசி, உடைமைகளை எடுத்துவர அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் தியானம் செய்த அதே இடத்தில் நரேந்திர தாமோதர தாஸ் என்ற பெயர் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும் தியானத்தில் ஈடுபட்டு வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுவாமி விவேகானந்தர் இதே பாறையில்தான் 1892ல் 132 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று நாள் தவம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதே பாறையில் பிரதமரின் தியான நிகழ்வு நடந்து வருகிறது.
வரும் சனிக்கிழமை மாலை வரை 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

