சிவகங்கை: கீழடி, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் மேலும் எட்டு இடங்களில் அகழாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக தொல்லியல் துறை அறிக்கை அளித்திருந்தது. எனினும் மத்திய தொல்லியல் துறையின் இயக்குநர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் கிடைக்க வேண்டிய அனுமதி, ஐந்து மாத தாமதத்திற்குப் பிறகு இப்போதுதான் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, முழு வேகத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கும் என்றும் இதற்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி ஆகிய இடங்களில் தமிழகத் தொல்லியல் துறை தீவிர அகழாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
தற்போது இந்த ஆண்டும் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர, தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் ஆகிய இடங் களிலும் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தந்தப் பகுதிகளில் உள்ள அகழாய்வு இயக்குநர்கள் முதற்கட்ட பணிகளைத் தொடங்கி உள்ளனர். அடுத்த வாரம் முதல் அகழாய்வுப் பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

