நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை வெற்றிகரமாக நடந்தேறியது.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முக்கியமான பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது என்றும் இந்த ஆய்வில் இது முக்கியமான கட்டம் என்றும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 1,700 வினாடிகளுக்கு முக்கியமான இயந்திரம் இயக்கப்பட்டு சோதனை நடந்ததாகவும் இதற்கு முன்பு 725 வினாடிகள், 350 வினாடிகள் எனச் சோதனை நடத்தப்பட்டதாகவும் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் வளாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்ப வேண்டும் என்ற இலக்குடன் ககன்யான் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தில் மனிதர்களை விண்ணில் இருந்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் மூன்றாவது கட்டத்திற்கு பயன்படும் இயந்திரத்தைதான் விஞ்ஞானிகள் தற்போது சோதித்துப் பார்த்ததாக ஆசீர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
இச்சோதனை நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆய்வு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

