தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஜராஜ சோழன் தந்தை வழங்கிய `அன்பில்’ செப்பேடு மாயம்

2 mins read
41231129-8300-4b0c-b5ec-44bc07588d09
பிரம்மபுரீசுவரர் கோயில். - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இருக்கிறது அன்பில். இந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது பிரம்மபுரீஸ்வரர் கோயில். மிகவும் பழைமையான பிரம்மபுரீசுவரர் கோயில் என்றழைக்கப்படும் தேவாரப் பாடல் பெற்ற தலமான சத்தியவாகீசுவரர் கோயிலில் இருந்த மிகப் பழைமையான செப்புத் தகடு ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. அந்தச் செப்புத் தகடு மாமன்னர் சுந்தர சோழனால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது.

அந்தத் தகட்டில் சுந்தரசோழன் ஆட்சியில் அவருடைய அமைச்சருக்கு 10 வேலி நிலத்தை வழங்கிய விவரம், மாதவ பட்டர் முன்னோர்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் செய்த தொண்டுகள் குறித்து இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில், இந்தச் செப்புத் தகடு மாயமானது குறித்து எழுந்த புகாரின் பேரில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். இதையடுத்து, மாயமான செப்புத் தகடு குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், சத்தியவாகீசுவரர் கோயில் அர்ச்சகர்கள், கிராம நிர்வாக அலுவலர், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதோடு, செப்புத் தகடு குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது தகட்டை வைத்திருப்போர் குறித்து தகவல் அளித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திடீர் வருகையளித்தார். அவரை கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் உள்துறைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் வரவேற்றனர். அதன் பிறகு, சுவாமி சந்நிதிகளில் வழிபட்ட சிவகுமார், கோயில் அலுவலகம் அருகே உள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, அன்பில் சத்தியவாகீசுவரர் கோயிலில் செப்புத் தகடு மாயமானது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, எஸ்.பி சிவகுமார், அன்பில் சத்தியவாகீசுவரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு கோயிலைப் பார்வையிட்டவர், செப்புத் தகடு மாயமானது குறித்து கோயில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். செப்புத் தகடு மாயமானது குறித்து சிலை தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்