தமிழகம், புதுச்சேரியின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று திராவிட முன்னேற்றக் கழக (திமுக) கூட்டணி. 2004 தேர்தல் வெற்றியை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாதித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர், 2004 தேர்தல் வரலாற்றை இந்தியா கூட்டணி திருப்பிக் காட்டும் எனக் கூறி வந்தனர். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் தலைவர்களின் இந்தக் கூற்று பலிக்காவிட்டாலும் தமிழ்நாட்டில் சாத்தியமாகியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக தனது வழக்கமான கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சந்தித்தது.
1996ஐ அடுத்து, 2004 தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 இடங்களை வென்றது.
2019 தேர்தலில் தேனி தவிர்த்து 39 இடங்களில் வெற்றி பெற்றது திமுக கூட்டணி.
இந்தத் தேர்தலில் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக 12 தொகுதிகளில் நான்காவது, மூன்றாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவும், பாஜகவும் இம்முறை தனித் தனி அணிகளாக களம் கண்டன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகள் மட்டுமே இடம்பெற்றன. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, ஓபிஎஸ் அணி உள்பட முக்கிய கட்சிகள் இடம்பெற்றன.
திமுகவை விமர்சிப்பதைவிட அதிகமாக பாஜகவும் அதிமுகவும் ஒன்றை ஒன்று விமர்சித்துக்கொண்டன.
தங்களுக்கு அடுத்த இடத்தில்தான் அதிமுக என்பது போன்ற பாஜகவின் அண்மைய கால விவாதங்களைக் தகர்த்தெறியவும், அதிமுகவின் செல்வாக்கை நிரூபிக்கவும் அக்கட்சிக்கு முக்கியமான தேர்தலாக இந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த இரண்டாவது தேர்தல் இது. அவருடைய பலத்தை நிரூபிக்கும் தேர்தலாகவும் இது அமைந்தது.
நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி, அதிமுக, பாஜக கட்சிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
திராவிட கட்சிகளின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 2014ல் தேர்தலில்அதிமுக தனித்துப் போட்டியிட்டு, 37 இடங்களில் பெரும் வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தல் வரலாற்றில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்ற திராவிடக் கட்சி என்ற பெருமையைப் பெற்றது. அதுவும், நாடு முழுவதும் வீசிய மோடி அலையைக் கடந்து வெற்றிகொண்டு சாதனை படைத்த அதிமுகவின் சரிவு தமிழக திராவிட அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது..
2022 பிப்ரவரி மாதம் 2ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி “நீங்கள் ஒருபோதும் தமிழ் மக்களை ஆட்சி செய்ய முடியாது. அது நடக்கவே நடக்காது,” என்று சவால் விட்டார். அவர் பேசிய அந்தக் காணொளி தற்போது மீண்டும் பரவலாகப் பகிரப்படுகிறது.

