சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக 35 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
வியாழக்கிழமை மாலை சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விட்டுவிட்டுப் பெய்த மழையால் சென்னையில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, இருசக்கர வாகனமோட்டிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னையில் 35 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 18 விமானங்கள், வந்துசேர வேண்டிய 17 விமானங்கள் தாமதமாகின.
டெல்லி, கோல்கத்தா, பெங்களூரு, மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஹைதராபாத், கோலாலம்பூர், சிங்கப்பூர் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை.
17 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன.
அவ்வப்போது இடி மின்னல் சூறைக்காற்று ஓயும்போது சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கின.
சென்னையில் இருந்து அபுதாபி, துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி செல்லும் விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளன.

