கடற்கரைப் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

கடற்கரைப் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

2 mins read
d4ce9cee-086b-4b3d-8b2f-3b461d9a2c64
மெரினா கடற்கரை. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மெரினா கடற்கரைப் பகுதியில் பொது மக்களுக்கு நள்ளிரவு நேரத்திலும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க காவல்துறை மறுத்துவிட்டது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஜலீல் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும்போது வெப்பத்தை தணித்துக்கொள்ள பொதுமக்கள் மாலை நேரங்களில் கடற்கரைக்குச் செல்கிறார்கள் என்றும் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறி காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர் என்றும் ஜலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வெயில் காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவிக்கும்போது, 24 மணி நேரமும் கடைகள் உள்ளிட்ட வர்த்தகங்கள் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் மது கூடங்கள் இயங்கவும் தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.

கடற்கரைப் பகுதிகளில் பொது மக்களுக்கு மட்டும் நேரக் கட்டுபாடு விதித்து துரத்தி விடுவதாக ஜலில் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு காவல்துறை பல்வேறு காரணங்களை முன் வைத்து இரவு வேளையில் கடற்கரையில் யாரையும் அனுமதிக்க இயலாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“நேரக் கட்டுபாடு இல்லாமல், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொது மக்களை அனுமதித்தால் சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. கடந்து இரண்டு ஆண்டுகளில் மட்டும் மெரினா கடற்கரையில் 54 பேர் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளனர்.

“இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிர் இழந்த சம்பவங்களும் பதிவாகி உள்ளது. எனவே இதுபோன்ற நேர கட்டுபாடுகளை விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது,” என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களுக்குப்பின் தமிழகத்தில் தற்போது கோடை முடிவுக்கு வந்து விட்டதால் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்றும் மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து காவல்துறை உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்.

குறிப்புச் சொற்கள்