மதுரை: நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அடுத்த கட்ட கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
கட்சியின் மாநாட்டிற்கு இடத்தை தேர்வுசெய்யும் பணி வருவதாகவும், விரைவில் அதுகுறித்து விஜய் அறிவிப்பார் என்றும் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஜூன் 22ல் நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை ஓடைப்பட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது புஸ்ஸி ஆனந்த் இதனைத் தெரிவித்தார்.
விஜய் மிக விரைவில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளதாக அவர் சொன்னார்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகம் ஜூன் 9ஆம் தேதி புதுக்கோட்டையில் திறந்துவைக்கப்பட்டது. அலுவலகத்தைத் திறந்து வைத்த புஸ்ஸி ஆனந்த், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே விஜய் தொடர்ந்து கூறும் அறிவுரை என்றார்.
“நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி சேருவது குறித்து தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னமும் இரண்டு ஆண்டு காலம் உள்ளது. அவசரப்பட வேண்டாம்,” என்றார் அவர்.
“புதுக்கோட்டையைத் தொடர்ந்து நாமக்கல்லில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18ஆம் தேதி என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த தகவல் எப்படி வெளியானது என்று தெரியவில்லை. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்தான் எங்களுடைய இலக்கு என்று ஏற்கெனவே தலைவர் விஜய் அறிவித்துவிட்டார்” என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், மக்களோடு இணைந்து பணியாற்றி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான மறைந்த அஷ்ரப்பின் உதவியாளராக பணியாற்றிய புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கௌரவ தலைவராக இருந்து பின்னர் தலைவரானார். 2006 தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்சி என்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதனால்தான் இவர் புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்பட்டார்.
எம்எல்ஏவாக இருந்தாலும் விஜய் மன்ற தலைவராக தொடர்ந்த அவர், விஜய்க்கு நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார். அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளரான புஸ்ஸி, விஜய் மக்கள் இயக்க பணியை தற்போது வரை கவனித்து வருகிறார்.

