சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தல் நடக்கும் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை அரசு அமல்படுத்த முடியாது.
மக்களவைத் தேர்தல் முடிந்து பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்கள் மீதான ஜூலை 24ஆம் தேதி என்றும் அவற்றைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 26 என்றும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படவுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவத்தினர் விரைவில் தமிழகம் வருகின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த முறை மீண்டும் தி.மு.க, பா.ம.க., நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி காலமானார்.

