சென்னை: அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
டெல்லியில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதிமுகவின் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் அதிமுக வெற்றிபெற முடியாது.
அதிமுகவை எம்ஜிஆர் தொண்டர்களின் இயக்கமாக தான் உருவாக்கினார். அதை ஜெயலலிதா மக்கள் இயக்கமாக மாற்றியதால்தான் 16 ஆண்டுகள் அவர் முதல்வராக இருந்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது, 9 இடங்களில் 3ஆம் இடத்துக்கு சென்றது தொடர்பாக, அதிமுகவின் தற்காலிக பொறுப்பு ஏற்றிருக்கும் தலைமையிடம் தான் கேட்க வேண்டும் என்றார் அவர்.
தமிழகத்தில் பாஜக அதிக வாக்குகள் பெற்று வளர்ச்சி பெற்றிருப்பதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முழு வீச்சாக களத்தில் இறங்கி, 24 மணி நேரமும் வெற்றிக்காக அரும்பாடுபட்டார் என்பது முக்கிய காரணம்.
தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள்தான் அரசியல் இயக்கங்களில் உள்ளனர். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் மனதை வென்றவர்கள், இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றார் அவர்.

