சென்னை: சமூக நீதியை காக்கக்கூடிய வகையில் நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
“திமுக எந்தக் காலத்திலும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது. திமுகவின் கொள்கைகளுக்கு எதிரான பல மசோதாக்களை நாங்கள் ஏற்கெனவே எதிர்த்துள்ளோம். சமூக நீதியை காக்கக் கூடிய வகையில் திமுகவின் செயல்பாடுகள் இருக்கும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறினார்.
மக்களவை, மாநிலங்களவை இரண்டுக்குமான திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியை டி.ஆர்.பாலு வகித்தார்.
டெல்லியில் திமுகவின் முகமாக இருக்கும் கனிமொழி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ளார். டி.ஆர்.பாலு கட்சியின் பொருளாளராக உள்ளார்.
தூத்துக்குடியில் இரண்டாவது முறையாக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கனிமொழி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு முக்கியமான காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் 18வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது. திமுக நாடாளுமன்றத்தில் 4வது பெரிய தனிக் கட்சியாகி உள்ளது.
இந்தநிலையில் கனிமொழிக்கு உயரிய பதவி கொடுப்பது டெல்லியில் அவர் கவனம் பெற வழி வகுக்கும். கூட்டணி ஆட்சி இருக்கும் போது காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இப்படிப்பட்ட நேரத்தில் டெல்லியில் வலுவான குரல் தரக்கூடிய ஒருவர் தேவை.
கனிமொழி 17 ஆண்டுகளாக எம்பியாக இருக்கிறார். இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் டெபாசிட் இழக்க வைத்துள்ளார். அதேநேரத்தில் கொள்கை ரீதியாக கனிமொழி உறுதியானவர். பாஜக மூன்றாம் முறை ஆட்சிக்கு வந்த நிலையில் கனிமொழி போல உறுதியான ஒருவர் தேவை. டெல்லியில் தமிழ்நாட்டிற்காக விஷயங்களை சாதிக்க கனிமொழி நல்ல வாய்ப்பாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மக்களவை குழுத் தலைவராக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன், மக்களவை கொறடாவாக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை குழுத்தலைவராக கொள்கைபரப்புச் செயலாளர் திருச்சி சிவா, மாநிலங்களவை குழு துணைத் தலைவராக தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைபரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

