எழுத்தாளர் பாமாவிற்கு ஒளவையார் விருது

எழுத்தாளர் பாமாவிற்கு ஒளவையார் விருது

1 mins read
52aeb821-9bf5-4ab4-a93e-49d4aef6d6d6
எழுத்தாளர் பாமாவின் இலக்கியப் பணியினைப் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2024ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதி வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் பாமா என்ற புனைபெயரில் எழுதும் ஃபாஸ்டினா சூசைராஜுக்கு தமிழகத்தின் ஒளவையார் விருது செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளரான பாமாவின் கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், குசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகளும் கவனத்தைப் பெற்றவை.

‘கருக்கு’ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000ஆம் ஆண்டின் ‘கிராஸ் வேர்ட்புக்’ விருதை வென்றது. மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘வன்மம்’ நாவல் ஆங்கிலம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும், ‘சங்கதி’ பிரஞ்சு, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும், ‘குசும்புக்காரன்’, ‘ஒரு தாத்தாவும் எருமையும்’ சிறுகதை தொகுப்புகளிலிருந்து சில கதைகள் ஆங்கிலம், ஹிந்தி, உருது, கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல். தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், ஊடகம், நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று சமூக நலன் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசால் ‘ஔவையார் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவோருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் சான்றிதழும் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்