கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: செல்வப்பெருந்தகை

கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: செல்வப்பெருந்தகை

1 mins read
174efb04-7ad6-465c-b292-44660d381a46
கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் எவராலும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி புதுச்சேரி உள்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. வெற்றிக்கொண்டாட்டத்தையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கினார்.

“வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருத்துகளை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்,” என்றார் அவர்.

தலைவர் ராகுல்காந்திக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான கொள்கை சார்ந்த இணக்கத்தின் காரணமாகவே இந்தியா கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த இணக்கம் என்பது உண்மையான உணர்வின் அடிப்படையிலானது. இந்தியாவிலேயே தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் இருப்பதற்கு காரணம் இதுவே. அதனால் தான் தமிழகத்தில் மகத்தான வெற்றியை இந்தியா கூட்டணியால் பெற முடிந்தது

எனவே, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்