சென்னை: பழமை வாய்ந்த கோவில்களை அழிப்பது வரலாற்றுக்கு நாம் செய்யும் துரோகம் என மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல ஆலய பாதுகாப்புப்பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 50,000க்கும் மேற்பட்ட கோவில்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், மார்ச் மாதம் வரை 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 250 க்கும் மேற்பட்ட கோவில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
‘கோவில்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கவனிக்கப்படாத கோவில்கள் அழியும் நிலையில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சென்னை அனகாபுத்தூரில் சோழர் காலத்து சிவன் கோவில் உள்ளது. அங்கு அண்மையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்குள்ள பல கோவில்களின் பழமை அழிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தோம். கருவறை முதல் கோவில் முகப்பு வரை எந்தவித பழமையான அமைப்பும் இல்லை. இது வரலாற்றுக்குச் செய்யும் துரோகம்.
“கோவில்கள் வரலாற்றை தாங்கி நிற்கும் சாட்சிகள். அவற்றில் உள்ள கல், மண், சிலை, கோபுரம், பிரகாரம் ஆகிய அனைத்தும் வரலாற்று தடயங்கள்.
“அவற்றைப் புதுப்பிப்பது நம் வரலாற்றை நாமே அழிப்பதற்குச் சமம்,” என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாக தமிழக ஊடக செய்தி தெரிவிக்கிறது.
வரலாறு இல்லாதவர்கள்தான் புதுகட்டுமானங்களை எழுப்புவர் என்றும் நாம் நீண்ட பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டவர்கள் என்பதை வெளிநாட்டினருக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.