கோவை: திமுக, இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சியின் ஆணவத்தைச் சுடுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மைய மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது இண்டியா கூட்டணி.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், கோவையில் நடைபெற்ற விழாவில் பேசியபோது அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் இலக்கு 200 தொகுதிகள் என்றார் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டுக்கு மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி எட்டு முறை வந்து சென்றதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பிம்பத்தை ராகுல் காந்தி ஒரேயொரு இனிப்புப் பொட்டலத்தைக் கொடுத்து மறையச் செய்துவிட்டார் என்றார்.
“அவர் வழங்கிய இனிப்பு இண்டியா கூட்டணியின் எதிர்த்தரப்புக் கணிப்புகளை பொய்யாக்கிவிட்டது.
“மக்களவைத் தேர்தலின்போது ‘40ம் நமதே’ என்று முழங்கினேன். ஆனால் அவ்வாறு நடக்கவிடுவார்களா என்று பலரும் யோசித்தனர். எனினும், நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
“இந்த விழா ஸ்டாலினுக்கு நடைபெறும் பாராட்டு விழா அல்ல. இது இண்டியா கூட்டணியின் அனைத்து தொண்டர்களுக்கும் நடக்கும் விழா. இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி.
“நம் மீது நம்பிக்கை வைத்து தமிழக அரசைப் பாராட்டி தமிழ் நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இண்டியா கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிநடத்த வேண்டும் எனத் தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இண்டியா கூட்டணியை ஸ்டாலின் வழிநடத்த திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால், இந்த நீட் தேர்வு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்பை தடுக்கும் கருவியாகவே உள்ளது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

