சென்னை: நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகள் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும்போது அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாமக தெரிவித்துள்ளது.
எனவே, மணல் கொள்ளையர்களின் செயல்பாட்டை அரசின் மீதான போராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மாநிலம் முழுவதும் பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபடும் மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.
மணல் கொள்ளை விவகாரம் தொடர்பான அண்மைய சம்பவங்களை தமது அறிக்கை ஒன்றில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் தலைவிரித்து ஆடுவதாகவும் அதிகாரபடி நிலையில் உயர் இடத்தில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்வதற்கு அக்கும்பல் துணிந்துவிட்டது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
“இந்த அளவுக்குச் செயல்படுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இவர்களுக்கு இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
“ஆளுங்கட்சியினர் அளிக்கும் துணிச்சல் காரணமாகத்தான் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாஃபியாக்களாக மாறி வருகின்றனர்.
“இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி, சமூக அமைதிக்கும் மிகப் பெரிய ஆபத்து. எனவே இப்போதுகூட அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்,” என்று அன்புமணி ராமதாஸ் தமது விரிவான அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

