புதுக்கோட்டை: கீழடி உள்பட தமிழகத்தில் உள்ள எட்டு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் தொடங்கி உள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகையில் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் தைலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் திட்டமிட்டபடி தொடங்கப்பட்டதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்தது.
கீழடியில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் 12 குழிகள் வெட்டப்பட்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியுள்ளது.
கீழடியில் இதுவரை 9 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மூன்று கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையும், 6 கட்ட அகழாய்வை மாநிலத் தொல்லியல் துறையும் மேற்கொண்டன.
தற்போது 10ஆம் கட்டமாக அங்கு மேலும் 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை சங்ககால வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட பகுதியாகும்.
தொடர்புடைய செய்திகள்
அப்பகுதியில் மேற்கொண்ட அகழாய்வின்போது தங்க மூக்குத்தி, எலும்பு முனைக்கருவி, பல்வேறு வகையான பானையோடுகள், பாசி மணி உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கிடைத்ததை அடுத்து, அங்கு இரண்டாம் கட்ட அய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மற்ற இடங்களிலும் அரசு அறிவித்தபடி அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை பகுதியில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 28 ஆகிய இரண்டு நூல்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 18ஆம் தேதி வெளியிட்டார்.