சென்னை: பால் உற்பத்தியில் தமிழகம் சிறப்பாகச் செயல்படுகிறது என்றும் நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 4.57 விழுக்காடு என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் வாடிக்கையாளர்களுக்கு பால் அட்டை மூலம் குறைந்த விலையில் பால் விநியோகம் செய்யப்படுவது தமிழகத்தில் மட்டுமே சாத்தியமாகி உள்ளது என அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
உலக அளவில் அதிக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாகத் திகழ்கிறது.
தமிழ்நாடு பால் உற்பத்தித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 10,814 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நாள்தோறும் 35.67 லட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 லட்சம் லிட்டர் பாலை உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் விற்பனை செய்கின்றன.
மீதமுள்ள சுமார் 31.67 லட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

