முதுமலை: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. ஆசியாவிலேயே நூற்றாண்டுகளைக் கடந்த பழமைவாய்ந்த முகாமாக விளங்கும் இங்கு மூன்று குட்டி யானைகள் உள்பட 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தர்மபுரி மாவட்டத்தின் பெண்ணாகரம் பகுதியில் மீட்கப்பட்ட 6 மாதக் குட்டி யானை, கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மீட்கப்பட்ட 3 மாதக் குட்டி யானை ஆகிய இரண்டு குட்டி யானைகளும் முதுமலை முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அவற்றுக்கு 4 பாகன்களும் கால்நடை மருத்துவக் குழுவினரும் திரவ உணவுகளை வழங்கி வருகின்றனர்.
வழக்கமாக கும்கி யானைகளுக்குத் தினமும் காலையில் உடற்பயிற்சியும் மனதை ஒருமுகப்படுத்தும் யோகாசனம், கும்கி பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
இதேபோல் மீட்கப்பட்டுள்ள இரு யானைக் குட்டிகளையும் கும்கி யானைகளாக மாற்றுவதற்காக தினமும் காலையில் பாகன்கள் நடைப்பயிற்சி அளித்து வருகின்றனர்.
தாயைப் பிரிந்திருக்கும் நினைவு வராமல் இருக்க வனத்துறையின் பாகன்கள் கண்ணும் கருத்துமாக குட்டி யானைகளைப் பராமரித்து வருகின்றனர்.
குட்டி யானைகள் நடைப்பயிற்சியின் போது சோர்ந்து நிற்பதும், சில சமயங்களில் அடம்பிடிப்பதும் குழந்தைகள் போல் விளையாடியும், சுட்டித்தனம் செய்தும் காண்போர் அனைவரையும் கவர்ந்து வருகின்றன.

