ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, ‘காக்கி உதவும் கரங்கள்’ குழுவின் மூலம் சக காவலர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ரூ.25.49 லட்சம் நிதிதிரட்டினர்.
இந்தப் பணத்தை ராஜேந்திரனின் மகன்களான முகுந்த் அகிலேஷ், 5, சம்ருத், 3, பெயரில் காப்பீடு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம் காப்பீடு பத்திரம், காசோலையை காவல் ஆய்வாளர் தங்கதுரை வழங்கினார்.
அதேபோல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாமகிரிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் அமுதா என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் ரூ.15 லட்சம் கருணைத் தொகையும் அரசு ஊழியர் குடும்பநல நிதி ரூ.5 லட்சம் ஆகியவற்றை அமுதாவின் குடும்பத்தினரிடம் நாமக்கல் ஆட்சியர் ச.உமா வழங்கினார்.