அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் போராட்டம்; பள்ளிக்கு பூட்டு போட்ட பெற்றோர்

அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் போராட்டம்; பள்ளிக்கு பூட்டு போட்ட பெற்றோர்

1 mins read
8b50ef56-6255-4ef9-9f0d-366b559131cf
அரசுப்பள்ளிக்கு பூட்டு போடும் பெற்றோர். - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள தேத்தம்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஏறக்குறைய 25 ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளியில், போதிய மின் வசதி, கழிவறை வசதி, தரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைக்காலங்களின்போது வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுவதாகவும் இதனால் பாடங்களைச் சரியான முறையில் பயில முடியாமல் தாங்கள் அவதிப்படுவதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பலமுறை பெற்றோர் தரப்பில் கல்வித் துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையிலும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த பெற்றோர் சிலர் பள்ளிக்கூடத்துக்கு பூட்டுப் போட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கைகளில் பதாகைகளை ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வித்துறையைக் கண்டித்தும் அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரியும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த கல்வித்துறை அதிகாரிகளும் காவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

குறிப்புச் சொற்கள்
பள்ளிபெற்றோர்போராட்டம்