விழுப்புரம்: கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முல்வருமான எடப்பாடி கே. பழனிசாமியும் பாமக நிறுவனர் ராமதாசும் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எடப்பாடி கே.பழனிசாமி, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“தமிழகத்தில் அரசு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது,” எனக் குற்றம்சாட்டியவர், “காவல்நிலையம் பின்புறத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. இது பொதுமக்களிடம் கொந்தளிப்பபை ஏற்படுத்தி உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிகாரமிக்கவர்கள் இதுபோன்ற சம்பவத்திற்கு பின்புலமாக இருந்து வருகின்றனர். இந்த கள்ளச்சாராய மரணத்துக்கு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்,” என்று கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை காலை பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தொடர்ந்து 45 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராகப் போராடி வருகிறேன்.
“கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும். மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி, பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரும் இறப்புகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

