சென்னை: கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்பு பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்தக் கள்ளச்சாராய விற்பனை மூன்று வருடங்களுக்கும் மேலாக நடந்துவருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
“தங்களது தெருக்களிலேயே மது விற்பனை நடப்பதால்தான் எல்லோரும் மது அருந்துகிறார்கள். பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்குப் போகிறவர்கள்,” என்றும் அவர்கள் கூறினர்.
அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் கூறும்போது, “சாராய விற்பனை பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டைமேட்டில் தாராளமாக நடக்கிறது. இது காவல்நிலையத்தின் பின்புறம் உள்ளது. அரசு நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்ததுதான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணமாகி விட்டது,” என்றார்.
நடந்த துயரச் சம்பவம் குறித்து கருணாபுரத்தைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, “எங்களின் தெருக்களிலேயே சாராயம் விற்கிறார்கள். எல்லோருமே கூலி வேலைக்குப் போகிறவர்கள். கையில் காசு கிடைத்ததும் பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள்.
“ஊருக்கு வெளியே எங்காவது தொலைவில் விற்றால் வயதானவர்கள் தொலைதூரத்துக்கு நடந்து சென்று மது அருந்த யோசிப்பார்கள். ஊருக்குள்ளேயே விற்பதால்தான் எல்லோரும் குடிக்கிறார்கள்,” என்று கூறினர்.