கள்ளக்குறிச்சி: திமுக ஆட்சியின் அடக்குமுறையைக் கண்டு அதிமுக அஞ்சாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நடப்பு திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வலியுறுத்தியும் அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு ஏழைகளைப் பற்றி கவலை இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.
“உயர் அதிகாரிகளுடன் பலமுறை கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிவிட்டார். நகரின் மையப்பகுதியில் அரசின் ஆதரவு இல்லாமல் கள்ளச் சாராயம் விற்பனை செய்ய முடியாது.
“58 பேரை பலி வாங்கியுள்ள கள்ளச் சாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். நடந்துவிட்ட சம்பவத்துக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் எடப்பாடி பழனிசாமி.
காற்றை எப்படி தடை செய்ய முடியாதோ, அதேபோல் மக்களின் உணர்வுகளையும் தடை செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், மக்களுக்காக நீதி கேட்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பினார்.
அதிமுகவின் போராட்டங்களை முடக்க ஒருதரப்பினர் திட்டமிடக்கூடும் என்றும் இதுபோன்ற அடக்குமுறைகளைக் கண்டு அதிமுகவினர் அஞ்ச மாட்டார்கள் என்றும் பழனிசாமி மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரத்தை வைத்துக்கொண்டு திமுகவினர் அதிகாரிகளை ஆட்டிப்படைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதிமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்கக்கூட இடையூறு செய்தார்கள் என்றும் சாடிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பொய்யான தகவல் காரணமாக, கள்ளச் சாராயம் குடித்த பலர் சிகிச்சைக்கு வராமலேயே இறந்து விட்டனர் என்றார்.
தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாய் ஓடுகிறது என்று மேலும் கூறினார்.

