தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது: பல வண்ணங்களிலான கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு

2 mins read
aef69eb3-cc91-4fe8-815e-8bb4fe4e7098
(இடமிருந்து) மொத்தம் 27 மணிகள் கிடைத்துள்ளதாக ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். சென்னானூரில் கண்டெடுக்கப்பட்ட கற்கால கருவி. - படங்கள்: இந்து தமிழ்
multi-img1 of 2

சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது பல வண்ணங்களில் செய்யப்பட்ட கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. முந்தைய அகழாய்வு நடவடிக்கையின்போது அங்கு 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், ஆயிரக்ணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களை மட்டுமல்லாமல் அனைத்துலக தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது கீழடி.

இதற்கிடையே, கடந்த ஜூன் 18ஆம் தேதி அன்று கீழடி, கொந்தகை ஆகிய இரு இடங்களில் 10ஆம் கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கின. இந்தப் பணி களைக் காணொளி வசதி மூலம் சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தற்போது இரண்டு பெரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு கீழடியில் அகழாய்வு நடந்து வருகிறது.

முதற்கட்டமாக தோண்டப்பட்ட சில அடி ஆழத்திலேயே, பல வண்ணங்களிலான கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. மொத்தம் 27 மணிகள் கிடைத்துள்ளதாக ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கொந்தகை பகுதியிலும் அடுத்த சில நாள்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளன.

4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கால கருவி

சென்னானூரில் நடைபெறும் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட கற்கால வெட்டுக்கருவி சுமார் 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தமிழக தொல்லியல் துறை அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னானூர் பகுதியில் தற்போது அகழாய்வு நடைபெற்று வருகிறது.

ஆறு நாள்களாக நடந்து வரும் இந்நடவடிக்கையின்போது உடைந்த நிலையில் கற்கால வெட்டுக்கருவி கிடைத்துள்ளது என்றும் ஏறக்குறைய ஆறு சென்டி மீட்டர் நீளமும் நான்கு சென்டி மீட்டர் அகலமும் கொண்ட இக்கருவி என்றும் இயக்குநர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

இக்கருவி 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றார் அவர்.

“புதிய கற்காலத்தில்தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது.

“அப்போது 30 முதல் 25 சென்டி மீட்டர் வரை நீளமுள்ள கருவியைத்தான் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி உள்ளனர். தற்போது கண்டெடுக்கப்பட்ட கருவி அளவில் சிறியது என்பதால் மரங்கள், இறைச்சியை வெட்டவும் வேட்டையாடவும் பயன்படுத்தியுள்ளனர்,” என்று திரு.பரந்தாமன் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்