38 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளியில் ரூ.15 கோடியில் இயந்திரவியல் ஆய்வகம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

38 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளியில் ரூ.15 கோடியில் இயந்திரவியல் ஆய்வகம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

2 mins read
90ca2b26-b3af-4e6a-997e-3cfc12605b58
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி வீதம் 38 அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் இயந்திரவியல் ஆய்வகம் (ரோபோட்டிக் லேப்) ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அதில், “அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஆய்வகங்களின் தரம் உயர்த்தப்படும்.

“முதற்கட்டமாக 1,000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பில் உயர்த்தப்படும்.

“மாற்றுத்திறன் குழந்தைகளின் உணர்வுத் திறனையும் நுண்தசை இயக்கத் திறனையும் மேம்படுத்தும் வகையில் 38 மாவட்டங்களில் தலா ஒரு பல்வகைத் திறன் பூங்கா ரூ.3.80 கோடியில் உருவாக்கப்படும்.

“அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உடல், மனரீதியாக, சமூக ரீதியாக தரப்படும் தொந்தரவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்படும். அவர்களுக்குப் பயிற்சி அளிக்க அகல்விளக்கு திட்டம் ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

நூலகத் துறை திட்டம்:

“அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வரும் சிறுவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் செலவில் நிறுவப்படும். திசைதோறும் திராவிடம் என்ற திட்டம் ரூ. 2 கோடி மதிப்பில் பிற இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளுக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்