சென்னை: தமிழ்த் தொண்டாற்றுவோருக்கு காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விருதுடன் ஒரு பவுன் தங்கப்பதக்கம், ரூ.10 லட்சம் ரொக்கம் வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாக ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் என குறிப்பிட்டார்.
தமிழ் அறிஞர்கள் ஆறு. அழகப்பன், ராமலிங்கம், சத்திய சீலன், சு.பாலசுந்தரம், கா.தா. திருநாவுக்கரசு, வேழவேந்தன் உள்ளிட்டோரின் நூல்கள் ரூ.91.35 லட்சம் செலவில் நாட்டுடைமை ஆக்கப்படும் என்றார் அமைச்சர் சாமிநாதன்.
சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணி களுக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் டெல்லி தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கை புணரமைக்க ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு அவரது பெயரில் விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

