மணல் முறைகேடு: அரசுக்கு ரூ.4,730 கோடி வருவாய் இழப்பு; அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

மணல் முறைகேடு: அரசுக்கு ரூ.4,730 கோடி வருவாய் இழப்பு; அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

2 mins read
97b1c306-8916-4308-9856-ffcf9cd78053
அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 23.64 லட்சம் யூனிட் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. - படம்: இந்து தமிழ்

சென்னை: தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்துள்ளதைவிட அதிக மணல் அள்ளப்படுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறு அள்ளப்படும் மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது என தமிழக காவல்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 23.64 லட்சம் யூனிட் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் அரசுக்கு ரூ.4,730 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அரசுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

தொடர் புகார்களின் எதிரொலியால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அச்சமயம் மணல் குவாரிகளில் உள்ள பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவையும் குவாரிகளில் உள்ள கண்காணிப்பு கருவிகளில் பதிவான காட்சிகளும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. மேலும் திருச்சி, கரூர், தஞ்சாவூர், வேலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் போலி ஆவணங்கள் மூலம் மணல் விற்பனை செய்து அரசுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் மொத்தம் ரூ.4,730 கோடிக்கு முறைகேடாக மணல் விற்பனை நடந்துள்ளது. எனினும் கணக்கு புத்தகத்தில் ரூ.36.45 கோடி மட்டுமே வருவாய் என குறிப்பிடப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.

இதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என வருமானவரித்துறை, ஜிஎஸ்டி விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி இருந்தது. தற்போது தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக இந்து தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களாக மணல் குவாரி முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்ததாகவும் அதன் மூலம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பல லட்சம் யூனிட் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்