தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை

2 mins read
0414b2c8-f5cd-42d7-bd32-87cecedf2aba
கள்ளச் சாராயம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் இனி கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆயுள் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா சட்டப்பேரவையில் ஜூன் 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், சட்டம் கடுமையாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை மறைக்க ஒரு தரப்பினர் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து ஏதாவது பேசுகின்றனர்.

“கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணம் குறித்து அறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. 20க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைதாகி உள்ளனர்.

“கள்ளச் சாராயம், நச்சுச் சாராயாம் ஒழிப்பு, குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கின்றன,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நச்சுச் சாராய விற்பனை என்பது ஒரு சமூக குற்றம் என்றும் விலை மதிப்பில்லாத மனித உயிர்களைப் பலி வாங்கும் இதை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“இனி கள்ளச் சாராய உயிர் பலி நிகழ்ந்தால் அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதைக் கண்டிப்புடன் சொல்லி இருக்கிறேன்.

“இதேபோல் போதைப்பொருள் நடமாட்டம், விற்பனையைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கஞ்சா தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குற்றவாளிகளின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“மது, போதை பழக்கங்களுக்கு எதிராக குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை அரசு ஒருபக்கம் எடுத்தாலும், இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் அதிக அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

போதை மருந்துகளின் பாதிப்புகளை உணர்த்துதல், மதுவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மீட்பது ஆகியவற்றை அரசு ஒர் இயக்கமாகவே நடத்தி வருகிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்