சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 11 வயது சிறுவன் இறந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
“ஏற்கெனவே தமிழகம் முழுவதும், ஒரு மாதத்தில் சுகாதாரமற்ற குடிநீரால் பத்து பேர் பலியானதாக செய்திகள் வந்த நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
“திமுக ஆட்சியில் தமிழகம் முழுதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில், குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக, தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
“தமிழகம் முழுதும் குறிப்பாக சென்னையில் குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை அரசும் மாநகராட்சி நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்,” என்று தமது அறிக்கையில் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே சென்னை சைதாப்பேட்டையில் வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் குழாய் மூலமாக குடிநீர் விநியோகிப்பதை நிறுத்திவிட்டு, லாரியில் குடிநீர் விநியோகிக்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிக்கும் வெளி மாநிலத் தொழிலாளி ராஜேஷ்குமாரின் மகன் யுவராஜ்,11, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகளும் வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் ஆகியோருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், “இப்பகுதியில் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன,” என்று குறிப்பிட்டார்.

