சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து திங்கட்கிழமை விசாரணை மேற்கொண்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி அளித்த தொலைக்காட்சி நேர்காணல் அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இளைஞர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லாததால் அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளியல், சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, தமிழக டிஜிபி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் ஜூன் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
பலருக்கு பார்வை பாதிப்பு, உடல்நலக் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி இடைநீக்கம்செய்யப்பட்டதோடு மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கிராம கண்காணிப்புக் குழுக்கள்
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க 562 கிராம அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் அழிக்கும் விதமாக, கிராம நிர்வாக அலுவலரை தலைவராகக் கொண்ட குழுவில் கிராம உதவியாளர், ஊராட்சி அளவிலான மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராமத்தின் ரோந்துப் பணி காவலர், பெண் சுகாதார தன்னார்வலர் ஆகியோரை உறுப்பினர்களாக நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல், கடத்துதல் ஆகியவற்றைக் கண்டறிந்து அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது காவல்துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களான கஞ்சா, குட்கா, பான்மசாலா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் காவல்துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.