தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூடலூரில் வெள்ளப்பெருக்கு; ஏராளமானோர் மீட்பு

2 mins read
f9bbc2c8-b690-4d30-bd08-f9af78f91a60
நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் அந்த வட்டாரம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. - படம்: தி இந்து

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை நின்றபாடில்லை. அதனால் கூடலூரைச் சுற்றியுள்ள சிற்றூர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பாடந்துறை, செருமுள்ளி, சேரங்கோடு, பந்தலூர், தேவாலா, கூடலூர் ஆகிய சிற்றூர்கள் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக பாடந்துறை, செருமுள்ளி, சேரங்கோடு, பந்தலூர் ஆகிய பகுதிகளில் ஆக அதிகமான மழை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் பந்தலூரில் மட்டும் 278 மி.மீ. மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. அதையடுத்து அப்பகுதியில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பந்தலூரில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. குறைந்தது பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் வீடுகளை இழந்தோர் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன்னானி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், பாதைகள், விளைநிலங்கள் ஆகியவற்றில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையின் வேகம் குறைந்தாலும் தாழ்வான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மழை நீரால் போக்குவரத்தும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களையும்‌ வெள்ளநீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் கூடலூரைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதனால் போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் இன்றியும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமலும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தேவாலா, கரியசோலை, பில்லுக்கடை பகுதிகளில் தொடர்ந்துமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கூடலூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இருவயல் என்னும் சிற்றூரில் குடியிருப்புப் பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
நீலகிரிகூடலூர்தமிழ் நாடு