கரூர்: கரூர் மாவட்டத்தின் வாங்கல் குப்புச்சிப் பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் முன்னாள் அதிமுக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலி ஆவணங்கள், கொலை மிரட்டல், மோசடிப் புகார்கள் அளித்தார்.
அந்தப் புகாரில், “தன்னிடம் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தான் சொல்லும் நான்கு பேர்களின் பெயரில் கிரையம் செய்து கொடுக்குமாறு மிரட்டினார். அதற்கு இணங்காததால் கூலிப்படையை ஏவிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
அவர்களுக்குப் பயந்து, எனது சொத்துகளை எனது மகள் பெயருக்கு மாற்றிக் கொடுத்தேன். அதன் மூலப்பத்திரத்தையும் பத்திரப்படுத்தேன்.
அவ்வாறு இருக்க, அவர்களோ போலிப் பத்திரமும் சான்றிதழ்களும் தயார்செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் காண்பித்து எனது சொத்துகளை அவர்களே தங்கள் பெயருக்குப் பதிவு செய்துகொண்டனர்.
எனவே, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளித்து, எனது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், வாங்கல் காவல்துறையினர், விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேர் மீது கொலை மிரட்டல் விடுத்தது, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கரூர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார் விஜயபாஸ்கர்.