சென்னை: சமூக நீதிக்குத் துரோகம் இழைப்பவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்றாண்டு காலத்தில், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பலவேறு நலதிட்டங்களை பதிவிட்டுள்ளார்.
மகளிருக்கான உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து வசதி. இறை அருளுக்கு நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள், கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதேனும் ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சமூக நீதிக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான நலத்திட்டங்கள் தொடர மக்கள் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.
பாஜக கூட்டணி சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எனவே அக்கூட்டணியை தோற்படிப்பதன் மூலமாக சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட வேண்டும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதற்கிடையே, ’நீங்கள் நலமா’ என்ற திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் நேரடியாக உரையாடினார் முதல்வர்.