தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடி அகழாய்வுப் பரப்பை அதிகரித்தால் கூடுதல் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும்: அமர்நாத் ராமகிருஷ்ணன்

2 mins read
8a13ff00-eb02-40de-bfd1-8236f2575b93
தொல்லியல் ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பானையுடன் அமர்நாத் ராமகிருஷ்ணன். - படம்: ஊடகம்

மதுரை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் இன்னும் முறையான அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்

மதுரையில் ‘மரபிடங்களின் நண்பர்கள் மற்றும் பாண்டிய வட்டாரம் அமைப்பு’ சார்பில் நடைபெற்ற நிகழ்வில் அவர் சொற்பொழிவாற்றினார்.

அப்போது, மக்களின் வாழ்விடங்களில் அகழாய்வு நடத்தாமல் மனிதன் புதைக்கப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

‘கீழடி அகழாய்வுகள் காட்டும் நகரப் பண்பாட்டுக் கூறுகளைப் புரிந்து கொள்ளல்’ என்ற தலைப்பில் அவரது சொற்பொழிவு அமைந்திருந்தது.

தமிழகத்தில் நூறு இடங்களை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் குறிப்பிடலாம் என்றும் அவ்விடங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மக்கள் வாழ்ந்து, மறைந்த ஒரே இடம் கீழடி. அதனால்தான் அதன் அகழாய்வு பேசப்படுகிறது. கீழடி அகழாய்வுப் பரப்பை மேலும் அதிகரித்தால் கூடுதல் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும்,” என்றார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

மேலும், கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடுவது குறித்து, மத்திய தொல்லியல் துறைதான் முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.

விவசாய வளர்ச்சிதான் கீழடியின் முன்னேற்றத்திற்கு காரணம் என்று குறிப்பிட்ட அமர்நாத், அங்கு தொழிற்சாலை இருந்ததை நிரூபிக்கத் தேவையான மூலப்பொருள்கள், உற்பத்தி செய்த பொருள்கள், அதன் கழிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.

“எனவே கீழடியில் மேலும் முறையான அகழாய்வு தேவை. ஆதிச்சநல்லுாரில் மனிதர்களை அடக்கம் செய்த இடத்தில்தான் அகழாய்வு நடந்துள்ளது.

“அம்மனிதர்கள் எங்கு வாழ்ந்தனர் என்பதை கண்டுபிடிக்கவில்லை. கடலியல் தொல்லியல் அகழாய்வை நாம் இன்னும் துவங்கவே இல்லை,” என்றார் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன்.

காவிரி ஆற்றுப்படுகையில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அங்கு நிறைய தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அமர்நாத் வலியுறுத்தினார்.

மேலும் மதுரை மாவட்டம் கொந்தகையில் உள்ள ஈமத்தாழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளை மரபணுச் சோதனைக்கு உட்படுத்தினால் சம்பந்தப்பட்ட மனிதர்களின் வயதை அறிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அவர், இதுநாள் வரை ஈமத்தாழிகளை புதைத்த இடங்களைத்தான் ஆய்வு செய்துள்ளோம் என்றார்.

மனிதன் வாழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்யும்போதுதான் மனித வரலாற்றைக் கணிக்க முடியும் என்றும் இதை மனதிற்கொண்டு காவிரி ஆற்றுப் படுகையில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேலும் கூறினார்.

மேலும், கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடுவது குறித்து, மத்திய தொல்லியல் துறைதான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தமிழகத்தில் கீழடி உள்ள எட்டு இடங்களில் மீண்டும் விரிவான அகழாய்வுப் பணிகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், மேலும் பல இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் நிபுணர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அகழாய்வுப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்